Thursday, December 14, 2006

Bakkiam


This is one of my favourite kavithai. It is written by my close friend Aravind. And ofcourse this poen is written to me :)

Friday, December 01, 2006

ஒரு சேதி சொல்லணும்

வணக்கமுங்க...என் பேரு நல்லமுத்து.பொறந்தது காஞ்சிபுரம் பக்கத்துல இருக்க படப்பை. அப்பா அம்மா ரெண்டு பேருமே கூலிங்க தான். அங்கியே கட்டட வேலை பாத்துகினு இருந்தாங்க. மாரி மாமா சொல்லி தான் மெட்ராஸ் வந்தோம். பெரிய கட்டட வேலை. இப்போ தான் என்னமோ குழந்தை தொழிலாளிலாம் இருக்க கூடாதுனு சொல்றாங்க. அப்போல்லாம் அது இல்ல போலருக்கு.

என் ஒம்பது வயசிலேயே கல்லு தூக்க ஆரம்பிச்சேன்.கொஞ்ச நாள்ல சிமெண்ட் பூச கத்துகிட்டேன். காண்டிராக்டர் வேலுவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம். நிறைய சோறு போடுவார்.2 வருஷத்துல கட்டடம் முடிஞ்சிடுச்சு. ஆனா எங்களுக்கு திரும்பி போக மனசு வர்ல. அங்கியே பொழப்ப ஓட்டினோம்.வேலு அய்யா என்ன வேலைன்னாலும் சொல்லிவுடுவார். மத்த நேரத்துல மூட்டை தூக்குவேன்.

பக்கத்து வீட்டு ரமணி அண்ணா ,"டே ஜட்ஜ் வீடு மாத்தி போறார். சாமான்லாம் தூக்கணும்.500 ரூபா தரேன்னு சொல்லி இருக்கார். நம்மாளு 3 பேரு இருக்காங்க. ஒருத்தனுக்கு உடம்பு சரியில்ல. நீ வரியா? " னு கேட்டார். எனக்கு 100 தான் தருவாராம். அதுவே எவ்ளோ பெருசு. உடனே கிளம்பிட்டேன். ஒரு பெரிய கட்டில்.. பொணம் கனம். அப்படியே முடியாம உக்காந்துட்டேன். அப்போ தான் ரமணி அண்ணா தனியா தள்ளிகினு போய் தண்ணி கொடுத்தார். "இத குடிடா.. வலி தெரியாது"னு சொன்னார்.. ஏதோ கசாயம் மாதிரி கப்புனு அடிச்சேன். என்னமோ.. எனக்கு அது பிடிக்கலை. எப்பவாச்சும் ரமணி அண்ணா கூட்டி போவார் 'பார்'க்கு. அவ அவன் பொலம்பறது கேக்க சிரிப்பா இருக்கும்.

அப்புறம் ஒரு கட்டட வேலையப்போ தான் மல்லிகாவ பாத்தேன். மஹாலட்சுமியே தான். நல்ல பொண்ணு. கோவில்ல அமைதியா முடிஞ்சது கல்யாணம். வேலு ஐயா வாட்ச் குடுத்தார். ரமணி அண்ணாவும் மத்தவங்களும் சேந்து சைக்கிள் தந்தாங்க.

அருணா குட்டி பொறந்தவுடனே வேளச்சேரில வீடு பாத்துகிட்டோம். 'வித்யா மந்திர்' ஒரு பள்ளிகூடத்துக்கு கட்டட வேலைக்கு போனேன். அது தான் என் வாழ்க்கைல முதலும் கடைசியுமா போட பள்ளிகூடம். ஆனா அருணா குட்டிய நல்லா படிக்க வைக்கனும்னு ஆசை. படிப்பு இலவசம் தான். ஆனா மத்தத நான் தானே வாங்கி தரணும். பேனா , பாக்ஸ், லொட்டு லொசுக்குனு.. வருசத்துக்கு ஒரு 3000 வேணுமாயிடுச்சு. தினமும் 10 மணி வரைக்கும் வேளை செய்ய வேண்டியதா போச்சு.

மல்லிகாவும் உடம்பு முடியாம வேளைக்கு போறது இல்லை. அப்பப்போ ஆட்டோவ ஓட்டுவேன். தனியாவே இருந்து இருக்கலாம் போல இருந்துச்சு. ஒரு நாள் ரமணி அண்ணாவ வழில பாத்தேன். கொஞ்ச நேரத்துல துக்கம் தாங்காம அழுதுட்டேன். குடும்ப பாரம் தாங்கல. அருணா வேற வயசுக்கு வந்துட்டா. அவள கரை சேக்கணும். ஆம்பிளை நான்னு பொறுத்துகிட்டேன். என்னமோ ரமணி அண்ணாகிட்ட அழணும் போல இருந்துச்சு. அவரு என்ன பாருக்கு கூட்டி போனார். அழுட நல்லா அழுனு சொன்னார்.. அப்றாம் அடிக்கடி அவரை பாத்தேன். எப்பவுமே 'பார்'க்கு போவோம். அதுவே பழகிருச்சு. என்னை மாதிரி தினக்கூலிக்கு கஷ்டத்துக்கா பஞ்சம். குடிதான் தெய்வமா துணை இருந்துச்சு. ஆனா எனக்கு பார்ல இருக்க பிடிக்காது. நம்ம கஷ்டமே தாங்கல. இதுல வேறா மத்தவனுங்க பொலம்பல். ம்ம் .. நிம்மதியா ரோட்ல விழுந்திருவேன். தெளிஞ்சா மறுபடியும் தண்ணி.
இந்த மல்லிகா மூஞ்சிய பாக்க முடியல. எப்போ போனாலும் காசு காசுனு..

இன்னைக்கும் வழக்கம் போல டாஸ்மாக்ல அடிச்சுட்டு நம்ம சுப்பர் மார்கெட் கிட்ட வரேன். நெஞ்சுல சுருக்குனு குத்துது. உடம்பெல்லாம் வேர்க்குது. ஒரு கம்பத்துல சாஞ்சுட்டேன். போதைலா யாரையும் கூப்பிட வரலை. திடீர்னு லபக்குனு ஏதோ இழுத்த மாதிரி இருக்கு. அப்றாம் வலியே தெரியல. காத்துல மிதக்குற மாதிரி இதுவும் கிக்கா இருக்கு. இன்னைக்கு 400 மில்லி தான் போட்டேன். அய்யாயோ என் உடம்பு கீய இருக்கு நான் மேல இருக்கேனா.... இவ்ளோ சீக்கிரம் நான் செத்துட்டேனே..

யாரும் கவனிக்கலை. ஆட்டோ சுரேஷ் கிட்ட வரான். 'என்ன் அண்ணே இன்னிக்கும் தண்ணியா .." னு சிரிக்கறான். மூச்சு வரலைனு கூடவா பாக்க மாட்டான். கொஞ்சம் தள்ளிதான் ஆட்டோ நிறுத்தி இருந்தான். 2 மணி நேரமாச்சு. நான் அப்படியே தான் இருக்கேன். ஒரு 500 பேராவது என்னை பாத்து இருப்பாங்க. முகம் சுளிக்கறாங்க. ஆனா செத்துட்டேன்னு புரியலை. நான் கத்தறது எனக்கே கேக்கலை.

ஒரு பொண்ணு என் கிட்ட வரா. என்னமோ யோசிக்கிறா. ஆனா பயப்படுறா. அவளுக்கு தெரியுதோ நான் செத்துட்டது..?? ஆனா என்கிட்ட வர பயப்பட்டு சுரேஷ கூப்புடறா.. அவன் வந்து .. "ஐயோ இவரா.. எனக்கு நல்லா தெரியும்மா.. என் அண்ணா மாதிரி. கொஞ்சம் தண்ணில இருக்கார்.. எவ்ளோ தடவை வீட்ல விடறது.. அவரே போய்டுவார்.. நீ போய்வாம்மா... " .. அந்த பொண்ணு ஒரு ரெண்டு நிமிஷம் நின்னா... அப்றோம் போய்டா.. ஆனா அவளோட நினைவலைகள் என்னையே சுத்தி சுத்தி வருது. எனக்கு என்ன ஆச்சோனு யோசிக்குறா.. அந்த நினைவலைகள் மூலமா தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்..

இப்போ நான் என் வீட்ல இருக்கேன். மல்லிகாவும் அருணாவும் நெஞ்சுல அடிச்சு அழறாங்க.. என்னால தாங்க முடியல.. இவங்க கதி என்ன இப்போனு தெரியலை. ..ரமணி அண்ணா வரார்.. என் உடம்ப கட்டி பிடிச்சு அழறார்.. தனியா போய் 'துக்கம் தாங்கலை'னு சொல்லி 2 பாட்டில் சரக்கு அடிக்கறார்.. எல்லாருக்கும் ஒரு சேதி சொல்லணும்.. இப்போ என்னை எரிக்க போறாங்க.. நான் போகணும்..

சேதிய மட்டும் சொல்லிருங்க...

-கேள்விழி