Sunday, April 19, 2009

பேசாத பேச்செல்லாம்

எல்லா வார இறுதிகளைப்போலத்தான் இந்த வார இறுதியும் தூக்கமும் சோம்பலும் நிறைந்த வார இறுதியாக இருந்தாலும் சில பல உரையாடல்கள், பதிவுகள் படித்த தாக்கத்தினால் கண்டிப்பா ஒரு பதிவு போடனும்னு போடறேன். இது எந்த ஒரு தலைப்பையும் சார்ந்தது இல்லை.

ஒரு சாதாரண பெண்ணின் ஒரு வார இறுதியில் நடந்த சில பல சம்பவங்கள்

இந்த வாரம் தான் அண்ணா லண்டன் கிளம்புகிறான் என்பதால் வீட்டில் கொஞ்சம் பரபரப்பு அதிகமாகவே இருந்தது. சனிக்கிழமை காலையில் ஏற்கனவே தயாரித்த பட்டியலின் துணைக்கொண்டு ஒரு பெரிய பெட்டியில் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டிருந்தோம். அலுவலகத்தில் இதே போல் வெளிநாடு பயணம் செய்பவர்களுக்காக தயார் செய்த பட்டியல் உதவியாக இருந்தது.

British Airways –ல் பயணம் செய்வதால் ஒரே ஒரு செக்கின் லக்கேஜ் மட்டும் தான் அனுமதி இருந்தது. 23 கிலோ வரைக்கும் எடுத்து செல்ல அனுமதி இருந்தாலும் 17 கிலோவிற்கு மேல் தாண்டவில்லை. நான் செல்லும் போது 2 * 23 கிலோவைத் தாண்டி 5 அல்லது 6 கிலோ இருந்து இருக்கும். பிறகு அது இது என்று வைத்து விட்டுத்தான் கிளம்பினேன். 20 நாள் பயணமாகவே இருந்தாலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். அதுவும் அண்ணாவிற்கு இருக்கும் நண்பர்கள் வட்டம் எல்லாருக்கும் அலைபேசியில் பேசியே பாதி நாள் கழிந்துவிட்டது.

சாயங்கால வேளையில் நண்பருக்காக ஒரு புத்தகம் தேடுகையில் கையில் அகப்பட்டது அறிவியல் இயக்க பாடல்கள் கொண்ட புத்தகம். மற்ற குழந்தைகளுக்கு கிடைக்காத அனுபவங்களும் வாழ்க்கைப்பாடங்களும் அறிவியல் இயக்கம் எனக்கு கொடுத்து இருக்கிறது. பல அனுபவங்களில் ஒன்று கலா ஜாத்தா தான். எளிமையாக சொல்லப்போனால் மக்களுக்கு அறிவொளிப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமம் கிராமமாக சென்று நாடகங்கள் பாடல்கள் பாடுவோம். விடுமுறை நாட்களில் மட்டும் சில ஜாத்தாக்களுக்கு சென்று இருக்கிறேன்.

அந்த பாடல்கள் எல்லாம் இப்போது திரும்பி பார்க்கையில் எத்தனை அர்த்தமானதாக இருக்கிறது. எத்தனை பெரிய செய்திகளை சின்ன சின்ன பாடல்களில் சொல்லி இருக்கிறார்கள். அப்படியே லயித்தவள் தான், அறைக்கதவை அடைத்து தன்னந்த்தனியாக பாடல்களை பாட ஆரம்பித்தேன். அறிவொளி பாடல்கள் மட்டுமல்ல, அதற்கு பிறகு எழுதிய எல்லாப்பாடல்களும் ஒரு சேர தொகுத்து இருந்தார்கள்.

மணல் மேடையில் எப்போயோ போட்டு இருந்தாலும் அதெல்லாம் மறக்க முடியுமா என்ன.. அப்படியே என்னை மறந்து பாடிக்கொண்டிருந்தேன். கூச்சமில்லாமல் மேடையில் பேசுவதற்கு கூட இந்த மாதிரி வீதி நாடகங்கள் அடித்தளம் போட்டிருக்க கூடும்.

எல்லா அறிவியல் இயக்க கூட்டங்களிலும் முதலில் பாடும் “அறிவியல் பரப்புவோம்”-ல் தொடங்கி, கடைசியாக பாதித்த “அன்புள்ள் கொண்ட அம்மாவிற்கு” பாடல் வரைக்கும் ராகம்

ஏத்தி இறக்கி பாடி மகிழ்வுற்றேன். இதெல்லாமே ஒரு வரம் தானே.

தம்பி பல தடவைக்கேட்டு கொண்டதால் அவனுக்காக coolgoose-ல் தேடி பல ரிங்டோனை இறக்கம் செய்தேன். அதைக்கேட்டு மகிழ்ச்சியில் இன்னும் திளைத்து அடடா இந்த வாரம் எல்லாமே அருமையாக அமைகிறதே என்று எண்ணிக்கொண்டேன்.

வழக்கம் போல குடும்ப சபையில் உட்கார்ந்து யார் யார் காலை அண்ணனோடு விமான நிலையம் செல்வது என்பதை முடிவெடுத்தோம்.

அப்படி இப்படி அடிச்சு பிடிச்சு தூங்கவே மணி 2 ஆகிவிட்டது. 3.45 மணிக்கெல்லாம் எழுந்திரு என்று அம்மா எழுப்பிவிட்டார்கள். எழுந்து பாதித்தூக்கத்தில் கிளிம்பி விமான நிலையத்தை அடைந்த போது மணி 4.45 இருக்கும். வெளி வாசல் வரைக்கும் மட்டுமே உறவினர்களுக்கு அனுமதி இலவசம். அதற்கு மேல் உள்ளே செல்ல தலைக்கு 60 ரூபாய் கொடுக்க வேண்டுமாம்.

மொத்தம் இருந்தது 7 பேர். நான், அம்மா, தம்பி, அண்ணி, இரண்டு வாண்டுகள், சித்தப்பா சித்தி. சரி எல்லாருக்கும் வாங்கிடலாம்-னு அண்ணா பச்சைக்கொடிக்காட்ட வாங்கி உள்ளே சென்றோம். ஒரு வருடம் ஆகப்போகிறது. நான் வெளிநாடு சென்ற நினைவுகள் அப்படியே எட்டிப்பார்க்க ஆரம்பித்தது. ம்… அதெல்லாம் யோசித்து.. எதற்கு..

ஒரு பயணம் மனிதன் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றுகிறது. வாழ்க்கையின் ஒரு சிறிய நகல் போல எல்லா உணர்ச்சிகளையுமே அடக்கி வைத்து கொள்கிறது பயணம். உதாரணத்திற்கு, முதல் தடவையாக வெளிநாடு செல்லும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு, படிப்பதற்காக வெளிநாடு செல்பவர்களின் ஆர்வம், குடும்ப வறுமைக்காரணமாக துமாய், சவுதி செல்லும் சராசரி குடும்பத்தலைவர்கள், வழி அனுப்ப வரும் மனைவியையும் குழந்தையையும் தொட்டு தொட்டு விடை கொடுக்கும் வலி, வேலை நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்லும் உயர்த்தர மக்கள், பயணத்தின் போது மட்டும் தெரிந்தவரை பார்த்தால் ஒரு புன்னைகையோடு நட்புக்கொள்ளுவது இப்படி எல்லா விதமான உணர்வுகளையும், எல்லாத்தட்டு மக்களையும் ஒரு 5 நிமிடத்தில் படமாக காண்பித்தது அந்த விமான நிலையம்.

இரண்டு அக்கா மகன்கள், விடுமுறைக்காக வீடு வந்திருந்தனர். அவர்களுக்காகத்தான் அண்ணா முக்கியமாக உள்ளே செல்ல அனுமதி தாள் வாங்கியது. அண்ணா உள்ளே சென்று விட இதுல தான் பெட்டிய சோதிப்பாங்க, அங்க பாருடா airhostess, அந்த டி.வில பெட்டிக்குள்ள இருக்கிறது எல்லாம் வரும்டா என்று அவர்களுக்கு ஆர்வம் கூட்டிக்கொண்டிருந்தேன்.

வீட்டில் தூங்கி வழிந்து கொண்டிருந்தவர்கள், அங்கு, அப்படி இப்படி ஓடிக்கொண்டிருந்தார்கள். இடை இடையே அம்மாவும் தன் பங்கிற்கு, நீங்களும் இந்த மாதிரி வெளி நாடு போகனும்னா மாமா மாதிரி நல்லா படிக்கனும். என்ன என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

ரொம்ப நேரம் முழித்து முழித்து பார்த்துக்கொண்டிருந்த பரத் கேட்ட ஒரே கேள்வி “இதெல்லாம் யாரு கட்டி இருப்பாங்க..”

கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்தது அந்த கேள்வி இருந்தாலும் “அரசாங்கம் தாண்டா”.. அங்க நடக்கிற மத்த விஷயங்கள் எல்லாம் அவனை பாதிக்கவில்லை போலும்.

பிறகு அண்ணா மீண்டும் ஒரு முறை வந்து மனைவிக்கு விடைக்கொடுத்து, சென்றான். அண்ணி கண் கலங்காமல் தைரியமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

மணி 6. எனக்கு மட்டும் தான்னு நினைச்சா எல்லாருக்குமே பயங்கர பசி. பசிக்குது பசிக்குது என்று வழிதோறும் கத்திக்கொண்டே சென்றோம். வீட்டிற்கு சென்று 15 நிமிடத்தில் காலை உணவு தயார். சும்மா இல்லை. தோசை, பூரி, சாம்பார், தயிர் சாதம் எல்லாமே சில நிமிடங்களில் எப்படி செய்தார் அம்மா என்று தெரியவில்லை. அம்மாக்கள் எல்லாமே அதிசிய பிறவிகள் தான்.

பிறகு எல்லாரும் கட்டைய நீட்டிட்டோம். ஒரு மணி நேரத்திலேயே அம்மா எழுப்பி அண்ணியோடு தாம்பரம் வரை செல்லும் வேலை தந்தார்கள். அண்ணனும் இல்லாததால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் பயணம். முற்றிலும் வித்யாசமானது. சோர்வு அதிகாக எங்கள் இருவர் முகத்திலும் அப்பி இருந்தது. நாங்கள் செல்ல வேண்டிய பள்ளி அடந்தோம்..

மீண்டும் நினைவலைகள்… பிரிட்ஜ்(bridge) என்ற அமைப்பு நடத்திய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற அனாதை இல்ல குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நானும் ஒரு தொண்டராக இருந்தேன். அதே விழா நடந்த பள்ளிக்கு தான் சென்றோம்.

குழந்தைகளோடு இருந்த சம்பவங்கள் எல்லாம் மட்டும் எப்பவுமே நினைவை விட்டு நீங்குவதில்லை. அதுப்பற்றி ஒரு நாள் நிச்சயம் எழுதனும். 3 வருடங்களின் மாற்றங்கள் அத்தனை தெரியவில்லை. இதோ இங்க தான் விளையாடினாங்க, அங்க தான் சாப்பாடு போட்டோம் என்று அண்ணிக்கு சொல்லி கொண்டு வந்தேன்.

பிறகு நான் மட்டும் மீண்டும் ரயிலில்.. இந்த தடவை பாட்டு பாடிக்கொண்டு வரும் பார்வையற்றவர் பற்றியும், 10 ரூபாய்க்கு பாசி மணியை விற்கும் பெண்மனி, முழுவதும் அலங்காரம் செய்து தன்னை எல்லோரும் நோட்டமிட வேண்டுமென்று கைகளை செயற்கையாக அசைத்து பேசிக்கொண்டிருந்த பெண், இப்படி வாழ்க்கையில் மனிதர்களி சந்திக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.. அப்படியே எங்கெல்லாமோ பயணித்த மனது வீட்டிற்கு வந்து கனவுகளில் தொடர்ந்தது.

மதியம் உணவிற்கு பிறகு கொஞ்சம் வலையில் அலசல், பிறகு குப்பைக்காடாய் மாறி இருந்த அறையை சுத்தம் செய்வதில் நேரம் கழிந்தது..

ஓரத்தில் அமேரிக்காவில் வாங்கிய ஒரு டி சர்ட் ஒளிந்து இருந்தது. இங்கே வந்ததிற்கு அப்புறம் அதைப்போடவே இல்லை. கொஞ்சம் இறுக்கமாக இருக்கும். அம்மாவில் வேண்டுக்கோளுக்காக அதெல்லாம் போடுவதே இல்லை. ஏதோ ஆசை வந்து மாற்றிக்கொண்டேன். அண்ணியை அழைத்து எப்படி இருக்கு-னு கேட்டேன். அருமை-னு சொன்னாலும் இங்கயே இருங்க அம்மாவுக்கு காட்டலாம்-னு தான் சொன்னாள். எனக்கும் அதுவே சரி என்று தோன்றியது.

அங்க டாலசில் இருக்கும் போது இதை ஓரிரு முறை அணிந்து இருக்கிறேன். யாரும் என்னை பார்க்கிறார்களா என்ற உறுத்தல் இல்லாமல் சுதந்திரமாக சென்றேன். ஆனால் அதே உடை எனக்கே கொஞ்சம் கூச்சத்தை தந்ததாக இருந்தது. இதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லலாம். அதில் ஆராய்ச்சி வேண்டாம்..

இரவு சிக்கன் குழம்பும், “பிரண்ட்ஸ்” திரைப்படமும், மனதிற்கு இதமளிக்கும் உரையாடலுடனும் இனிமையாக முடிவடைந்தது.